‘கும்பிட்டு கேட்கிறோம் பிள்ளைகளைக் காட்டுங்கள்’

346 0

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சிறைச்சாலையில், மீதமிருந்த கைதிகளில் சிலர், வெவ்வேறு சிறைகளுக்கு நேற்றுக்காலை அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குஓரளவுக்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவத்தை கேள்வியுற்ற கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும், சிறைச்சாலைக்குச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் நின்றிருந்தனர். அதில், பெரும்பாலானவர்கள், சிறையிலிருப்போரின் தாய்மார், இன்னும் சிலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்து கதறியழுதனர்.

அவர்களுடன், கையிலிருந்த குழந்தைகளும் வீரிட்டு அழுதன, அம்மாவின் கையை தாங்கியிருந்த பிள்ளைகள் அழுதனர். தந்தைமாரும் கண்ணீர் சிந்தி, பிள்ளைகளை காட்டுமாறு கைக்கூப்பிக் கேட்டுக்கொண்டனர். எனினும், மீதமிருந்த கைதிகளை ஏற்றியிருந்த சிறைச்சாலைகள் பஸ்கள் இரண்டும், கடுமையான பாதுகாப்பு பரி​வாரங்களுடன் அங்கிருந்து பரந்துவிட்டன.

குழுமியிருந்தவர்கள், “எங்கள், பிள்ளைகள், இருக்கின்றனரா? இல்லையா? எனக் காட்டுங்கள்” “இல்லையேல், கூறுகங்கள்”, “குடு போட்டுதான் பிடித்துச் சென்றனர், ஆகையால், கும்பிட்டு கேட்கின்றோம், பிள்ளையைத் தாருங்கள்” என்றனர்.

மஹர சிறையிலிருந்த பலருக்கும் பிணைகள் கிடைத்துள்ளன. எனினும், விடுவிக்கப்படவில்லை என்பது அங்கிருந்தவர்கள் ஆதங்கமான குரலிலிருந்து புரிந்துகொள்ளமுடிந்தது.

“ என்னுடைய மகனுக்கு பிணை கிடைத்தது. எனினும், ​விடுவிக்கவில்லை” என தாயொருவர் கதறியழுதார்.

“இரண்டு மாதங்களாக, எனது பிள்ளையை பார்க்கவில்லை. பார்க்கவும் விடவில்லை. இருக்கிறாரா? இல்லையா? என்பதையாவது காண்பியுங்கள்” என்றார்.

அங்கிருந்தவர்களின் ஆதங்க குரலில், “ எங்கள் பிள்ளைகள் குற்றவாளிகள் அல்லர், ஆனால், கொரோனாவில் கொன்றுவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. கொரோனா தொற்றில், இறந்துவிடுவார் எனக் கூறிவிடுவர்” என அச்சப்பட்டனர்.

சுதுபுத்தாவை தேடித்தாருங்கள்” என மார்பிலேயே அடித்துக்கொண்டு கதறியழுத மற்றுமொரு தாய், மஹரவிலிருந்து சற்று தூரத்திலிருந்தே தான் வருகின்றேன். “மூன்று மாதங்களாக பிள்ளையை பார்க்கவில்லை”, “பால்குடி மறவாத குழந்தைக்கு, எங்களால் என்ன கூறுவதென்றே தெரியவில்லை” எனக்கூறி அழுதார்.

“எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்று கூறுங்கள்” எனக் கெஞ்சிக்கேட்ட மற்றுமொரு தாய், “போன் எடுத்து கொடுங்கள், ஒரேயொரு தடவை பேசிகொள்கின்றோம்” என மற்றுமொருதாய் அழுது புலம்பியது அங்கிருந்தவர்களையும் அழச்செய்துவிட்டது.

“பிடிவிறாந்து பிடிக்கப்பட்டும், எம்.பிகள் பலரும் தலைமறைவாக சுற்றிதிரிந்தனர்” என ஆதங்கப்பட்ட மற்றுமொரு பெண், “பிணையில் எடுப்பதற்கான பணம் இன்மையால் ஏற்பட்ட தவறுக்காக, தன்னுடைய கணவனை அடைத்துவைத்துள்ளார்கள், தயவுசெய்து அவரை விட்டுவிடச் சொல்லுங்கள்“ என்றார்.