தனிமைக்கு விடுதலை– பாகிஸ்தானிலிருந்து கம்போடியா சென்றது ‘காவன்’ யானை !

323 0

யானைகளே இல்லாத பாகிஸ்தானுக்கு கடந்த 1985 ஆம் ஆண்டு இலங்கை அரசு பரிசாக வழங்கியது தான் இந்த காவன் யானை.

இதற்கு துணையாக 1990 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து சாஹ்லி என்ற பெண் யானை அழைத்து வரப்பட்டது.

இஸ்லாமாபாத்திலுள்ள வன உயிரியல் பூங்காவில் இரு யானைகளும் மகிழ்ச்சியுடன் இருந்த சூழலில், 2012 ஆம் ஆண்டு சாஹ்லியின் மரணம் காவனை வெகுவாகவே சோகத்தில் ஆழ்த்தியது.

இதனால், காவனை தனிமை வாட்டியதால் அடிக்கடி சுவற்றில் தலையை மோதிக் கொண்டு தனது சோகத்தை வெளிப்படுத்தியது.

இது குறித்த புகைப்படம் வெளியாகி உலகம் முழுவதுமுள்ள வன உயிரின ஆர்வலர்களை வேதனைப்படுத்தியது. உலகிலேயே தனிமையான யானை காவன் என்ற சோகப் பெயரும் அதற்கு வந்தது.

இந்தச் சூழலில் தான் அமெரிக்க பாடகியான  செர்  (Cher ) காவனை பாகிஸ்தானிலிருந்து விடுதலை செய்து கம்போடியாவுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார்.

இதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அவர் நாடிய நிலையில், காவனுக்கு  விடுதலை கிடைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்லாமாபாத்திலிருந்து விமானம் மூலம் காவன் நேற்றைய தினம் கம்போடியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கம்போடியாவில் அங்கு வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மற்ற யானைகளுடன் காவன் சேர்க்கப்படுவான். யானையின் தனிமையை விரட்ட முயற்சி எடுத்த அமெரிக்க பாடகருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.