நாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி!

300 0

நாகலாந்தில் நாய் இறைச்சியை விற்கக் கூடாது என விதிக்கப்பட்ட அரசின் தடையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் நாகலாந்தில் நாய் மற்றும் நாய் இறைச்சி விற்பனை, இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாகலாந்தில் நாய்களின் கால்கள் கட்டப்பட்டு, இறைச்சிக்காக அவை பைகளில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நாகாலாந்தில் கடந்த ஜூலை 2ஆம் திகதி நாய் மற்றும் நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனை செய்வோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவும் செப்டம்பர் 14 ஆம் திகதி நாகாலாந்து அரசிற்கு உயர்நீதிமன்றம் வாய்ப்பை வழங்கியது. ஆனால் அரசு அதை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், நாய் இறைச்சியை விற்கக் கூடாது என விதிக்கப்பட்ட அரசின் தடையை நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நாய் மற்றும் நாய் இறைச்சி விற்பனை, இறக்குமதிக்கு தற்போதைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.