பல்வேறு பகுதிகளிலிருந்து கைதிகளை பழைய போகம்பரை சிறைக்கு மாற்ற அரசாங்கம் எடுத்த முடிவால் முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பேசிய அவர், இந்த நடவடிக்கை எடுப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கண்டியில் எந்த நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
போகம்பரை சிறைச்சாலைக்கு அருகிலுள்ள கண்டி தேசிய வைத்தியசாலையில் கடந்த சில நாட்களில் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கண்டி சந்தை மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக போகம்பரை சிறைச்சாலையில் இதுவரை 150 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதும் பல தொழிலாளர்கள் தினமும் போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தருகிறார்கள் என்றும் இதனால் வைரஸ் மேலும் பரவுகிறது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஆகவே தகுந்த நடவடிக்கை எடுத்து கண்டியில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.