வடக்கிற்காக பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு உரிய இடத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
வடக்கில் உள்ள ஐந்து மாவட்டத்திற்கும் பொதுவான இடத்திலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது அவசியமானதாகும்.இந்த நிலையில் குறுகிய அரசியல் இலாப நோக்குடன் ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கிடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் பொருளாதார வல்லுனர்களுடன் ஆலோசித்து மேற்கொள்ளப்பட தீர்மானத்தை அரசியல் லாப நோக்கம் கருதி நோக்காது வடமாகாணத்திற்கு எந்த இடம் பொருத்தமானது என்பதைனை கண்டுணர்ந்து ஒமந்தை அல்லது மாங்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.