சென்னையில் வாட்டி வதைக்கும் குளிரால் நடுங்கும் மக்கள்

273 0

சென்னையில் தொடர் மழை ஓய்ந்த நிலையில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக மக்கள் நடுங்கி வருகிறார்கள். ‘வெந்நீரில் மட்டுமே குளிக்க முடிகிறது’, என்கிறார்கள்.

நிவர் புயல் காரணமாக கடந்த 23-ந்தேதி தொடங்கி சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. தொடர் மழை காரணமாக நகரே வெள்ளக்காடானது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் அவதிக்கு ஆளானார்கள். பல பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயே மழைநீர் புகுந்தது.

இந்த நிலையில் நிவர் புயல் ஓய்ந்தநிலையில் மழையும் ஓய்ந்துவிட்டது என்றே சொல்லலாம். நகரில் பெரிய அளவில் மழையும் பெய்யவில்லை. ஆனால் மழைக்கு பதிலாக மக்களை குளிர் வாட்ட தொடங்கி இருக்கிறது. தொடர் மழை பெய்த காலத்தில் நாள் முழுவதுமே குளிர்ச்சியாகவே இருந்தது. மழையையும், குளிரையும் மக்கள் ஒருசேர அனுபவிக்க நேரிட்டது. ஆனால் தற்போது மழைக்காலத்தை காட்டிலும் குளிரின் தன்மை அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே குளிர் மிகுதியாகவே இருந்து வருகிறது. இதனால் பலரது வீடுகளில் ஏ.சி. எந்திரங்கள் மற்றும் மின் விசிறிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். குளிர் ஒருபக்கம் என்றால் கொசுக்கடி ஒருபுறம் மக்களை புலம்பவைத்து வருகிறது.

குளிரை எதிர்கொள்ளும் வகையில் கம்பளி போர்வைகளை அதிகளவில் மக்கள் வாங்க தொடங்கிவிட்டனர். மேலும் குழந்தைகளுக்கு தேவையான மப்ளர், சுவெட்டர் உள்ளிட்டவைகளையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். குடிநீரை கூட காய்ச்சி குடிக்க தொடங்கிவிட்டனர். மேலும் காபி, டீ உள்ளிட்டவைகளும் வீடுகளில் அதிகமாக அருந்தப்படுகிறது. அந்தவகையில் வீடுகள் கிட்டத்தட்ட குளிர்சாதன பெட்டி போலவே மாறியிருக்கிறது.

இரவு பொழுது தாண்டினாலும் அதிகாலை பொழுதில் குளிர் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. வீடுகளின் உள்ளே இருக்கும் தரைப்பகுதி, பாதம் ஒட்டும் அளவுக்கு ஜில்லென்று இருக்கிறது. குளிர் காரணமாக வெந்நீரில் மட்டுமே குளிக்க முடிகிறது என்று மக்கள் கூறுகிறார்கள். அந்தளவு குளிரின் தாக்கம் இருக்கிறது. ஆனால் பகல் பொழுதில் வெயிலின் தாக்கமும் இருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தொடர் மழை ஓய்ந்த நிலையில் சென்னை மக்களை குளிர் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.