இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரினால் நேற்று (27) மாலை பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
சட்டவிரோதமாக படகில் இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த 5 பேரும், அவர்களை அழைத்துச் சென்ற ஆட்கடத்தல்காரர்கள் இருவரும் மன்னார்– பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 29 வயது இளைஞன் ஒருவரும், 29 வயது யுவதி ஒருவரும், 38 வயதான பெண்ணொருவரும், 08 மற்றும் 09 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளுமே இவ்வாறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 32 மற்றும் 37 வயதான பேசாலை பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்களே ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பேசாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரனைகளின் பின்னர் குறித்த 7 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது