யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயிலில் தீபம் ஏற்றிய குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திருக்கார்திகைக்காக யாழ். பல்கலைக்கழக வாயியில் தீபமேற்றிய சமயத்தில் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட மாணவன் எம்.தர்ஷிகனை உடனடியாக விடுவிப்பதற்காக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் சட்டத்தரணிகளான வி. மணிவண்ணன், வி. திருக்குமரன் ஆகியோர் நடவடிக்கைகளில் இறங்கியிருந்த நிலையில், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் இவ்விடயத்தில் தலையிட்டு மாணவனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவுடன் தொடர்புகொண்டு பேசியிருந்தார்.
இன்று நடைபெற்றது தமிழ் மக்களுடைய ஒரு கலாசார நிகழ்வு என்பதை அங்கஜன் விளக்கியதையடுத்து, அதனை ஏற்றுக்கொண்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட மாணவனை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதேவேளையில், மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, கோப்பாய் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்ட துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, மாணவனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார்.
பொலிஸ் சம்பிரதாயங்களை முடித்த பின்னர் மாணவனை விடுதலை செய்வதற்குக் கோப்பாய் போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இணங்கியிருந்தனர். அதற்கையமைய வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.