பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து பெறும் நடவடிக்கை, இன்று காலை திருகோணமலை – அனுராதபுர சந்தி சந்தைத் தொகுதிக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளிலான 16 நாள் செயற்பாட்டை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக 5 கோரிக்கைகள் அடங்கிய அட்டை ஒன்றில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
குறித்த நிகழ்வு நாளை மூதூரில் இடம்பெறவுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து கையெழுத்து பெறப்பட்ட அட்டைகளுடன் மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பெண்கள் வலையமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இந்த வருடத்தில் மாத்திரம் 1700 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக பெண்களுக்கான தேசிய குழு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கும் முறைப்பாடுகள் கிடைப்பதாக பெண்களுக்கான தேசிய குழு தெரிவித்திருந்தது.
வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக பல பிரிவுகளூடாகவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரதேச செயலக மட்டங்களிலும் வேலைத்தளங்களை மையமாகக் கொண்டும் தோட்டப்புற பிரதேசங்களிலும் தெளிவூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.