கிழக்கில் இனக்குரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்மீது இனி சட்டநடவடிக்கை-கிழக்கு முதலமைச்சர்

371 0

nazeerகிழக்கு மாகாணத்தில் மற்றவர்களின் மத கலாசார உரிமைகளை மதிக்காது செயற்படும்  நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள இராஜகிய பாடசாலை மற்றும் முள்ளிப்பொத்தானை சிங்கள வித்தியாலங்களில் முஸ்லிம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் அணியக்கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிலர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே, கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றவர்களின் மத, கலாசார உரிமைகளை மதிக்காது செயற்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரது மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணிவதற்கும் அவர்களின் மத கலாசரங்களை பின்பற்றுவதற்குமான உரிமை இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அரசியல் யாப்புக்கு முரணாக எவராவது நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

திருகோணமலை பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும், அது தொடர்பில்  கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் பதிவாகாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன்போது மேலும் தெரிவித்தார்.