யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் வடக்கில் பல பாடசாலைகளில் ஆலயங்களில் தனியார் காணிகளில் இராணுவம் குடியிருக்கின்றது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் வடக்கில் பல பாடசாலைகளில் ஆலயங்களில் தனியார் காணிகளில் இராணுவம் குடியிருக்கின்றது என்று குறிப்பிட்ட அமைச்சர் கடந்த அரசாங்கம் மீள்குடியேற்றம் செய்ய முடியாதிருந்த இடங்களில் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் கடந்த 2 வருடங்களில் கிட்டத்தட்ட 2000ஏக்கர் தனியாருக்கு சொந்தமான இடங்களை விடுவித்து மக்களை மீள்குடியேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருந்தும் கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவம் 15 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளது என்றும் கிளிநொச்சி இரணைதீவை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமலும் தமது சொந்த வாழ்வாதார தொழிலை மேற்கொள்ளமுடியாமலும் இராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சுமத்தினார்.
எனவே ஏனைய காணிகளை விடுவித்தது போன்று இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள பரவிபாஞ்சான் வீடுகளை விடுவிக்க வேண்டும் என்றும் இரணைதீவிற்கு மக்கள் குடியேறி தொழில் செய்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கேட்டுகொண்டார்.