பேலியகொடை மீன் சந்தையை மீள திறக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம்

283 0

பேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பது தொடர்பில் சிறிலங்காஅரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையை விரைவாக மீள திறக்கும் முகமாக, சுகாதார துறையினரால் அங்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

சுகாதார துறையினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீன் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் பேலியகொடை மீன் சந்தை மீள திறக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், மொத்த விற்பனையாளர்கள் மாத்திரம் செல்வதற்கே அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்காவில்கொரோனாவின் இரண்டாவது அலை மினுவங்கொடை மற்றும் பேலியகொடயில் இருந்து ஆரம்பமானது. இதனால், இந்த இரண்டு இடங்களில் இருந்து மட்டும் இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த பகுதிகளில் தற்போது வைரஸ் தாக்கம் குறைவடைந்துள்ளமையால் இவற்றை மீளவும் திறக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.