கொழும்பு காலி முகத் திடலில் அமைக்கப்பட்டு வருகின்ற உலக சாதனைக்குரிய நத்தார் மரம் அவசியமற்றது என, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் சன் லொரேன்சோ இன் லுச்சீனா-வின் கர்தினால்-குரு ஆல்பர்ட் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த நத்தார் மரம் அமைக்க செலவிடப்படும் பணத்தைக்கொண்டு, வீடுகள் இல்லாதோருக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வாறான நத்தார் மரம் ஒன்று அமைக்கப்படுவது தொடர்பில் யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நத்தார் என்பது இல்லாதோருக்கு உதவி செய்வதே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நிறுத்திவிட்டு, ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் காலி முகத் திடலில் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, அவர் இவ்வாறான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த உலக சாதனைக்கான நத்தார் மர நிர்மாணப்பணிகளுக்காக, 1 கோடி 20 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருவதாகவும், குறித்த பணத்தை பல்வேறு தரப்பினர் ஒன்றாக இணைந்து நன்கொடையாக வழங்கியதாகவும், நிர்மாணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உலகின் உயரமான நத்தார் மரம் பிரான்ஸ் நாட்டிலேயே தற்போது அமைக்கப்பட்டுள்ளது. அதன் உயரம் 292 அடி உயரம், எனினும் இலங்கையில் அமைக்கப்பட்டு வருகின்ற நத்தார் மரத்தின் உயரம் 325 அடி என்பது குறிப்பிடத்தக்கது.