ஊட்டியில் புதிய வீடுகள், அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தி பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15.49 கோடி மதிப்பில் 172 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர் உள்பட நீர்நிலைகளை ஒட்டி வசித்து வரும் மக்களின் வீடுகளுக்குள் பருவமழை காலங்களில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு வசித்தவர்களுக்கு மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைகளை ஒட்டி வசிப்பவர்கள், அபாயகரமான இடங்களில் இருப்பவர்களுக்கு பிரகாசபுரத்தில் புதிய வீடுகள் வழங்கப்பட உள்ளது.
இங்கு 43 பிளாக்குகளாக வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வீடு 392 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது. மின் வினியோகம் கொடுப்பதற்காக மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. குடிநீர் வினியோகம் செய்ய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதால், தற்போது நடைபெற்று வரும் இறுதி கட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலை அமைப்பது, குழாய்கள் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு போன்ற பணிகள் நடந்து வருவதை ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனை, நிர்வாக கட்டடம், விடுதிகள் போன்ற கட்டட பணிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகமான பணியாளர்களை கொண்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின் போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவீந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து வெளிநாட்டு மரங்கள் வெட்டப்பட்டு, அங்கேயே ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனை கட்டிடங்கள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது.