36 மணி நேரமாக கவுண்டன்ய மகாநதி வெள்ளத்தில் சிக்கித்தவித்த பெண்ணை 36 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கூட நகரம் பார்வதியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மனைவி எல்லம்மாள் (வயது 55). செதுக்கரை பொன்னம்பட்டி -இந்திராநகர் இடையே கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே மேடான பகுதியில் இவர்கள் கொட்டில் அமைத்து அதில் 30-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வந்தனர். கடந்த வியாழக்கிழமை மாலை எல்லம்மாள், பன்றிகளுக்கு உணவு வைத்து அங்கேயே இருந்துள்ளார்.
அப்போது மோர்தானா அணையிலிருந்து கவுண்டன்யமகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட எல்லம்மாள் வெள்ளம் வடிந்து விடும் என கருதி அந்த குடிசைப்பகுதியில் தங்கியுள்ளார். இரவு ஆற்றில் வெள்ளம் குறையாததால் போன் மூலம் வருவாய்த்துறையினருக்கு குடும்பத்தினர் தகவல் அளித்தனர். ஆற்றில் 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் சென்றதால் எல்லம்மாள் இருந்த பகுதிக்கு மீட்பு படையினரால் செல்ல முடியவில்லை.
இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழு குழுவினர் இன்ஸ்பெக்டர் ஓலா தலைமையில் 17 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். எல்லம்மாள் சிக்கிய பகுதியை துல்லியமாக கண்டுபிடிக்க ‘ட்ரோன்’ கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் இருப்பிடம் கண்டறியப்பட்டது. இதனிடையே 24 மணி நேரத்தை கடந்தும் எல்லம்மாள் மீட்கப்படாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். நள்ளிரவு 12 மணிவரை விளக்கு வெளிச்சத்தில் பேரிடர் மீட்பு படையினர் கடுமையாக போராடியும் வெள்ளம் அதிகமாக சென்றதால் மீட்க முடியவில்லை. இதனை அடுத்து மீட்பு படையினர் திரும்பிச் சென்றுவிட்டனர்.
நேற்று அதிகாலையில் மீண்டும் அப்பகுதிக்குச் சென்று ஒரு மணி நேரம் போராடி எல்லம்மாளை பத்திரமாக மீட்டனர். சுமார் 36 மணி நேரம் வெள்ளத்தின் நடுவே சிக்கித் தவித்த எல்லம்மாள் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எல்லம்மாளை மீட்ட சம்பவத்தை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளம் வந்தபோது எல்லம்மாளின் கணவர் முனியப்பன் இதேபோல் சிக்கிக்கொண்டு, தீயணைப்பு துறையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.