இலங்கைக்கு வந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதியும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் அனைத்து வகையான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுக்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய – இலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், இலங்கையில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பில் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
அஜித் டோவால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் புதிய பகுதிகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய இந்தியாவின் விருப்பம் குறித்து தெரிவித்தார்.
ஏற்கனவே திருப்திகரமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் வலியுறுத்தினர்.