கொத்து குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் அது தவறில்லையாம்- பரணகம

5441 0

maxwell_1-450x262ஸ்ரீலங்காவில் இறுதி கட்ட யுத்தத்தில் கிளஸ்டர் எனப்படும் கொத்துக் குண்டுகளை இராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும் அது சட்டவிரோதமானது அல்லவென காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இறுதி கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கொத்து குண்டுகளுக்கான சர்வதேச ரீதியிலான தடை நடைமுறைக்குவரவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஒகஸ்ட் முதலாம் திகதியே பேரழிவை ஏற்படுத்தக் கூடிய கொத்து குண்டுகளுக்கான தடை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் 2008 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்து தலைநகர் டப்லினில் கொத்து குண்டு பாவனை தடைசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி சாசனமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.இதனை அடுத்து உலகில் பெரும்பாலான நாடுகள் யுத்தத்தின் போது கொத்து குண்டுகளை பயன்படுத்துவதில்லை என்று கொள்கை ரீதியில் உடன்பாட்டையும் எட்டியிருந்தன.

இந்த நிலையிலேயே 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இலங்கையின் 30 ஆண்டு கால யுத்தத்தின் இறுதி கட்டத்தில் கொத்து குண்டுகள் ஸ்ரீலங்கா அரச படையினரால் வன்னியில் வாழ்ந்த மக்களை இலக்குவைத்து பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.இதற்கான ஆதாரங்களும் யுத்தத்தின் போதும் யுத்தம் முடிந்து ஏழரை ஆண்டுகளுக்கு பின்னரும் வெளியாகியுள்ளன.

இறுதியாக வன்னியில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ ட்ரெஸ்ட் தொண்டு நிறுவனத்தை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் நாளாந்த பத்திரிகையான த காடியன்  தகவல் வெளியிட்டிருந்தது.இந்த நிலையிலேயே இறுதிக் கட்ட யுத்தத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரால் கிளஸ்டர்ஸ் எனப்படும் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம, அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது தவறு அல்லவெனவும் கூறியுள்ளார்.

எனினும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கு, நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து சுயாதீனமானதும் பாரபட்சம் அற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் வலியுறுத்தியிருந்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரின் போது ஸ்ரீலங்கா குறித்து வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பித்த போதே ஆணையாளர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.

Leave a comment