தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 யேர்மனியில் ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுவதும் கொரோனா கிருமியின் அச்சுறுத்தலால் அவதிப்படும் நிலையில் யேர்மனியில் இத்தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் யேர்மனிய அரசினால் விடுக்கப்பட்டிருக்கும் கொரோனாச் சட்ட விதிகளுக்கு அமைவாக ஆறு இடங்களிலும் மக்கள் அணிதிரண்டு மாவீரத் தெய்வங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி தங்கள் இதய வணக்கத்தைத் செலுத்தினர்.
யேர்மனியில் மாவீரர் நிகழ்வானது முன்சன்,ஸ்ருற்காட்,டுசில்டோர்ப்,எசன்,பிறீமகாபன் பேர்லின் ஆகிய பெருநகரங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்டது. முன்சன் நகரத்தில் தேவாலயத்திலும் பிறீமகாபன் நகரத்தில் ஓர் மண்டபத்திலும் எசன் நகரத்தில் அங்கு அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியிலும். மற்றும் டுசில்டோர்ப், ஸ்ருற்காட்,பேர்லின் ஆகிய இடங்களின் நகரமத்தியிலும் இடம்பெற்றது.
ஸ்ருற்காட் நகரமத்தியில் உள்ள திறந்தவெளி வாகனத் தரிப்பிடத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் அங்கு வருகைதந்த அனைத்து மக்களின் மனங்களில் தாயகத்தின் துயிலுமில்லங்களை மனக்கண்களில் காட்டி நின்றது. கொரோனா விதிமுறைக்கு அமைவாக மக்கள் இடைவெளி விட்டு பரந்து நிற்பதற்கு அத்திடல் இடமளித்ததால் ஐந்நூறுக்கும் அதிகமான மக்கள் ஒரேநேரத்தில் அணிதிரள அனுமதியளித்தது.
சரியாக 12.41.மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை முழுமையாக காணொளியாக காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 13.17. மணிக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் 2020ற்கான கொள்கைவகுப்பு அறிக்கையின் ஒலிவடிவம் ஒலிக்கவிடப்பட்டது.
பின்பு ஐரோப்பிய நேரம் 13.35 மணிக்கு ஒரு நிமிட நேரம் மணிஒலி ஒலிக்கவிடப்பட்டு 13.36 ற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு முதல் மாவீரர் லெப்ரினன் சங்கர் அவர்களின் உயிர் பிரிந்த நேரமாகிய 6.07க்கு (ஐரோப்பிய நேரம் 13.37) முதன்மைச் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. முதன்மைச் சுடர் ஏற்றும்போது துயிலுமில்லப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது சம நேரத்தில் கல்லறைகளுக்கு முன்பாக நின்ற மாவீரர் குடும்பத்தினர் சுடர்களை ஏற்றி தம் இரத்த உறவுகளை நினைத்து கண்ணீர்விட்டு அழுதகாட்சி அனைவரின் மனங்களையும் கனக்கவைத்தது.
மலர்வணக்கப் பாடல் ஒலிக்கவிடப்பட மக்கள் அணியணியாக வந்து சுடர் ஏற்றி மலர் தூவியபடி மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து மலர் தூவி வணங்கினார்கள். சம நேரத்தில் அங்கு அமைக்கப் பெற்றிருந்த மேடையில் இசைவணக்கம், சிறப்புரை,நடனங்கள் என்பன நிகழ்ந்தன. பின்பு தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடலை அனைத்து மக்களும் கைதட்டிப் பாடினர். அதன்பின்பு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் எழுச்சிக் கோசத்தை அனைத்துத் தமிழ் மக்களும் உரத்த குரலில் சொல்லி சரியாக 15.45 மணியளவில் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
இந்த வேளையில் யேர்மனியில் ஆறு இடங்களிலும் நிகழ்ந்த நிகழ்வுகளில் உரிமையுடன் வந்து உதவிய அனைத்து தமிழீழ மக்களுக்கும், குறிப்பாக ஆறு இடங்களின் நிகழ்வுகளை ஒளிப்படமாக ஒரு இடத்தில் ஒருங்கிணைத்து நேரடி அஞ்சலாக தொலைக்காட்சிகளுக்கும், இணையத் தளங்களுக்கும் முக நூல்களுக்கும் கொடுப்பதற்கு பணிபுரிந்த அனைத்து உணர்வாளர்களுக்கும் தேசியத்தின் சார்பாக வாழ்த்துக்கள் கூறி பெருமைகொள்கின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.