நாளும் பொழுதும், விதைத்து விதைத்துக்
காத்திருந்த கைளில் பழுத்துக் கிடக்கிறது
குருதி வழிந்த ஞாபகத்தின் தழும்புகள்.
உள்ளெரியும் தணலில் உருகுகிறது ஊமைக் காயம்.
“பிடிமண்” எடுத்துத் தூவித் தூவி
பிள்ளைகளை மண்மூட விட்டு
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்த
பெத்தவர்களின் முகங்களில் பெருகுகிறது
தவமாய்த் தவமிருந்த நேர்த்தியின் பெருங் கண்ணீர்.
எல்லாவற்றிற்கும் ஒரு விடிவு வரும்
என்ற காத்திருப்பின் கொதிக் குமிழில்
உட்கார்ந்திருக்கின்றன பலிகொடுத்த பாவி உறவுகள்.
தர்மம் ஒரு நாளில் வென்றே தீரும்
தம் பிள்ளை உயிருக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்
என்ற நம்பிக்கைகளின் வேர்களில்
படர்கிறதா ஏமாற்றத்தின் பெருந்துயர்?
எங்கே நம் வேளாண்மை?
எங்கே நம் யாகத்தின் பொழிமழை?
ஞாபகங்களின் நடுத் தெருவில்
இறங்கி நின்று பார்க்கின்றன
செண்பகப் பறவையின் இரத்தக் கண்கள்.
வாகைகள் பூக்கும் வன்னியின் தெருக்களில்
அலைந்து திரிகிறது மண்சுமந்த மேனியரின்
வெப்பியாரப் பெருமூச்சு.
பழைய நினைவுகளின் கொப்பளிப்பில்
பெருகிப் பாய்கிறது பேராற்றின் நினைவுகள்.
நிலவு காய்க்கும் பின்னிரவில்
வானம் அதிரும் சத்தம் கேட்கும்.
மண்ணடி குலுங்கும்.
நாளொரு திசையில் துப்பாக்கிகள் சடசடக்கும்.
பரா வெளிச்சம் கங்குலைப் பகலாக்கும் .
எறிகணைகள் கூவிக் கொண்டு கடக்கும்.
குருட்டு வல்லூறுகள் இரவில் இரை தேடும்.
தென்னோலை கட்டிய வாகனங்கள்
காயக்காரர்களோடு பறந்து போகும்.
“அம்மாளாச்சியே! யார் பெத்த பிள்ளைகளோ”
என்று முணுமுணுக்கும் தாயுதடுகள்.
காலை விடிகிற போது சிரித்த முகங்களோடு
பத்திரிகைகள் நெஞ்சிலடிக்கும்.
வீர மரணங்களால் விளைந்தது நம் வாழ்வு.
சோக இசையால் பூத்தன கிராமங்கள்.
சாம்பிராணி வாசம் பரவ
நம்மைக் கடந்தன கொடி போர்த்திய பேழைகள்.
துப்பாக்கிகளை உயர்த்தியபடி பின்னிருந்தன
நாளை மடியச் சாத்தியமான கருமுகங்கள்.
மாவீரர் மண்டபங்களில்
உறவுகள் வரிசையானார்கள்.
பாதங்களை நிறைத்தன சாவுப் பூக்கள்.
புரண்டு அழுதன பாசக் கொடிகள்.
விசும்பி ஒளிந்தன காதல்கள்.
கதறிச் சரிந்தாள் பெத்த தாய்.
விறைத்துக் கிடந்தார் தந்தை.
பழகிப் போன தோழ தோழியர்கள்
வெறித்துப் பார்த்தபடி நடந்தனர்.
“நேற்று வரை இந்த மண்ணுக்காக …
இந்த மக்களுக்காக ….
உழைத்த இந்த மாவீரன்
இன்று விழிமூடித் துயில்கிறான்”
கேட்டுக் கேட்டுப் பழகிய செவிகளில்
பெருகியோடிற்று குற்றவுணர்வு.
உயிர்களால் வளர்ந்தது நம் தேசம்.
போர் நெருக்க நெருக்க
துயிலுமில்லங்கள் விரிந்து விரிந்து சென்றன.
சாவுகள் விளைய விளைய
புதை குழிகள் வரிசையாய்ப் பூத்தன.
அடுக்கிக் கொண்டே போனோம்
அந்தம் தெரியாமல்.
நாளை விடியும். நாளை விடியும் என
நமக்கு நாமே நம்பிக்கை சொன்னோம்.
வீர மரணங்களால் நிறைந்தன ஊர்கள்.
பாடல்களால் நிறைந்தது காற்று.
“ இவர்கள் ஆணி வேர் அறுபடாத ஆலமரங்கள்.
வேர் விடுவார்கள். மீண்டும் விழுதெறிவார்கள்.”
என்று ஒவ்வொரு முறை சொல்லி முடிக்கையிலும்
வானில் பறந்தன மரியாதை வேட்டுக்கள்.
விதைகுழி வரை காவிச் சென்றனர்
ஒன்றாய் வளர்ந்த பாசறைத் தோழர்கள்.
கயிற்றின் வழியே மண்ணிறங்கியது மாவீரப் பேழை.
கதறிக் கரைந்து பாயப் பார்த்தாள் தாய்.
அண்ணா! அண்ணா! என்று ஆழக் குழறிய தங்கையை
அள்ளிப் பிடித்தன அக்காமாரின் கைகள்.
அப்பாக்களின் வலியில் இறுகியது முகங்கள்.
ஒவ்வொருவராய் போடப் போட
மண்ணால் நிறைந்தது மாவீரக் குழி.
எல்லோரது பிடிமண்களாலும்
மெல்ல மெல்ல மறைந்து போயிற்று
பிள்ளைப் பேழை.
கருவறை பார்த்துக் கொண்டிருக்க
கல்லறை வடிவில் பூத்தது குஞ்சு.
சந்தனக் குச்சிகளையும், மாலையையும் வைத்து விட்டு
எல்லோரும் விடை பெற்றுப் போனோம்.
மண்ணின் குழந்தைகள் தன்னந்தனியே உறங்கினர்
.
நிலவு காவலுக்கிருந்த இரவுகளில்
கல்லறைகள் பெருமூச்சுக்களால் கதைத்தன.
நிறைவேறாத கனவுகளின் பாடல்களால்
மிதந்தது துயிலுமில்ல வெளி.
கார்த்திகை மாலையில் விளக்குகள் எரிந்தன.
விளக்குகளின் பின்னே வழிந்தன கண்ணீர்கள்.
பிள்ளைகளை விதைத்தவர்கள்
தென்னம் பிள்ளைகளை எடுத்துச் சென்றனர்.
மழை பொழியப் பொழிய குடைகளுக்குள்
உருகியுருகிக் கசிந்தது உறவுகளின் கண்ணீர்.
“ உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம். ”
என்ற வரிகளில் வெடித்துப் பிளந்தன இதயங்கள்
“எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ”
எரிமலை உறங்கிக் கிடந்த சொற்களின் மீது
ஓவென்று கதறிப் பெருக்கெடுத்தோடியது.
இழப்புக்களின் வலியாறு.
எல்லோரது கைகளும் சிலிர்த்தன.
எல்லோரது தேகங்களும் நடுங்கின.
எல்லோரது இதயங்களும் பொங்கின.
பிள்ளைக்கு விளக்கேற்றும் தந்தை
தந்தைக்கு விளக்கேற்றும் பிள்ளை.
தாய்க்கு விளக்கேற்றும் குழந்தை
கணவனுக்கு விளக்கேற்றும் மனைவி
மனைவிக்கு விளக்கேற்றும் கணவன்
நடுகல்லைத் தழுவிக் கதறும் தாய்
கல்லறையைக் கட்டியணைக்கும் சகோதரி
தள்ளி நின்று தனித்தழும் காதலி
தங்கையைத் தேற்றும் தம்பி
தாங்க முடியாது வெளியே நின்று
வானம் பார்த்துப் பல்லைக் கடிக்கும் தமையன்
எல்லாக் காட்சிகளின் சாட்சியாகவும்
கண்மூடிக் கிடந்தன
விடுதலையின் பெயரால் ஒப்புக் கொடுத்த
நம் வீரப் பறவைகள்.
சனங்கள் அழுது முடித்து வீடு திரும்பினர்.
போராளிகள் களம் திரும்பினர்.
மீண்டும் மீண்டும் பூத்தன
வீரமும் சாவும்.
வெற்றியும் தோல்வியும்.
யுத்தமும் சமாதானமும்.
இன்று
கல்லறையும் இல்லாக் களத்துப் பிள்ளைகளின்
கனத்த கதைகள் இப்படித் தான் நடந்தேறின.
இப்படித் தான் இருந்தன
எங்களின் சிவப்பு நாட்கள்.
இப்படித் தான்
நாங்கள் நெருப்பில் நடந்தோம்.
இப்படித் தான்
எங்கள் மாவீரர்களின் கதைகள் நடந்தேறின.
– தீபிகா –
26.11.2020
08.41 காலை.