மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் மற்றும் புதுக்குடியிருப்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக மக்களால் அனுஷ்ட்டிக்கபட்டு வருகின்றது.
இந்நிலையில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக திறக்குமாறு வலியுறுத்தி, பலவந்தமாக திறக்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், முல்லைத்தீவு நகரிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களும் கடைகளைப் பூட்டியே இருந்தனர். முல்லைத்தீவு மாத்திரமின்றி புதுக்குடியிருப்பிலும் விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை திறக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களை தொடர்புகொண்டும், அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்களைக் கொண்டும் உடனடியாக விற்பனை நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தியதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சுயவிருப்பின் பெயரில் கடைகளை பூட்டிய உரிமையாளர்களுக்கு தனிமனித சுதந்திரம்கூட இல்லாத நிலை காணப்படுகின்றதாக என வர்த்தகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு நகரங்களில் பூட்டியிருக்கும் கடைகளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.