ஜெர்மனியில் வரும் டிசம்பர் 20ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

460 0

ஜெர்மனியில் ஊரடங்கு வரும் டிசம்பர் 20ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு அதிபர் மெர்கல் அறிவித்து உள்ளார்.

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் 6.01 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  14.1 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் 9.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கை பற்றி தனது அமைச்சர்களுடன் அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறும்பொழுது, ஜெர்மனியில் நவம்பர் இறுதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது.  அதனால், வரும் டிசம்பர் 20ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும்பொழுது மட்டுமே ஜனவரி தொடக்கத்திற்கு முன் சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்படும் என மெர்கல் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் காணப்படும் சூழலில் ஜனவரி தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்.  ஜனவரியில் 1 லட்சம் பேருக்கு 50 பேர் என்ற (7 நாட்களில்) எண்ணிக்கைக்கு குறைவாக தொற்றுகள் குறையாவிடில் கட்டுப்பாடுகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.