சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும்

313 0

15326570_1854052178165608_5816171554741335263_nசிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி.எம்.சுமந்திரன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று நடைபெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சின் மீதான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வேறு ஏதாவது அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையாற்றக்கூடியவரிடம் மீள் குடியேற்ற அமைச்சை ஒப்படைக்கவேண்டும்.

தமிழ்ப் பெயரை வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் அவர் செயற்படுவதை அனுமதிக்கமுடியாது.

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் போதிய தீர்வினைக் கொண்டிருப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் அண்மையில் நடந்த கூட்டமொன்றில் கூறியிருக்கிறார்.

இதனைச் சொல்வதற்கு அவருக்கு எந்தளவு தைரியம்? இதனைச் சொல்வதற்கு அவர் யார்? நீங்கள் இப்படிக் கூறுவதற்கு மக்கள் உங்களைத் தெரிவுசெய்தார்களா?

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தில் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளீர்கள், அப்படியானால் ஏன் நாம் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கவேண்டும்.

இவ்வாறான கேள்விகளை நீங்களே உங்களுக்குள் கேட்கவேண்டும். இதனால் சமூகங்களுக்கிடையில் ஏற்படும் பாதிப்பை நீங்கள் உணரவில்லை.

வடக்கில் பொருத்துவீட்டுத்திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக கூட்டமைப்பு எதிர்க்கின்றது என்கின்றீர்கள்? அரசியல் காரணங்கள் என்ன என்பதைக் கூறுமாறு சவால் விடுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள மாற்று வீட்டுத் திட்டம் ஏன் சாத்தியமில்லையெனவும் கேள்வி எழுப்பினார்.