பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணை

530 0

201607050611174341_Kerry-offers-Bangladesh-FBI-help-as-police-probe-attackers_SECVPFவங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 1-ந் தேதி புகுந்த 7 பயங்கரவாதிகள் அங்கிருந்த வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை பணயக்கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடியாக சண்டையிட்ட ராணுவத்தினர் எஞ்சிய பணயக்கைதிகளை மீட்டனர். இந்த தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ஒருவர் உயிருடன் பிடிபட்டார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றனர். ஆனால் இதை நிராகரித்த வங்காளதேச அரசு, இது ஜமாத்துல் முஜாகிதீன் போன்ற உள்ளூர் பயங்கரவாத அமைப்பினரின் சதிச்செயல்தான் என கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணியில் வங்காளதேச போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விசாரணையில் வங்காளதேசத்துக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் ஷேக் ஹசீனாவை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, பயங்கரவாதிகளுக்கு எதிரான வங்கதேச அரசின் விசாரணைக்கு பாராட்டு தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் அமெரிக்க புலனாய்வுத்துறை (எப்.பி.ஐ.) உள்ளிட்ட அனைத்து விதமான சட்ட உதவிகளையும் உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.

இதற்கிடையே பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேற்று பிரதமர் ஷேக் ஹசீனா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வெளிநாட்டினரின் உடல்கள் அந்தந்த நாட்டு தூதரகங்களில் ஒப்படைக்கப்பட்டன.

Leave a comment