மாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை!

300 0

மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் நிகழ்த்திய உரையில், “கார்த்திகை-27 இலங்கைத் தீவிலும், உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நெருப்பாய் எரிந்து, அவர்களின் நெஞ்சைப் பிழிந்து தம் பிள்ளைகளின் நினைவுகளைச் சுமக்கும் மகத்தான நாளே மாவீரர் நாள்.

வாழ்வியலின் அத்தனை சுகபோகங்களையும் துறந்து, ‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்கிற மனித சுதந்திர உணர்வின் பிரதிபலிப்பாய் தம் தேச மக்களின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்களின் ஈகைத்திருநாளே மாவீரர் நாள் என்பதால் அதன் யதார்த்தத்தை நான் இங்கு பேச விளைகிறேன்.

மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும், அதன் பண்பாடு தழுவிய விழுமியங்களோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாள். புத்திர சோகத்தில் துவண்டு போயுள்ள ஒவ்வொரு தாயும், தந்தையும் தங்கள் புதல்வர்களுக்கும், புதல்விகளுக்கும், பெண்கள் தாம் கரம்பிடித்த கணவன்மார்களுக்கும், குழந்தைகள் தங்கள் தாய், தந்தையரின் கல்லறைகளுக்கும் பூக்கள் சொரிந்து, நெய் தீபம் ஏற்றி, அழுது தீர்க்கும் ஆத்மார்த்தமான நாள்.

கண்ணீரால் தம் உறவுகள் புதையுண்ட நிலங்களை நனைத்து, கல்லறைகளை தங்கள் பிள்ளைகளாய் கருதியவர்கள் அந்தக் கல்லறைகள் உங்களால் தகர்த்தெறியப்பட்ட பின்னர் தம் புதல்வர்கள் புதையுண்ட மண்ணையே தங்கள் பிள்ளைகளாக கட்டியணைத்து அழுது புரள்கின்றார்கள். அந்தத் தாய்மார்களது கண்ணீரையும், ஆற்றாமையையும் பயங்கரவாதம் என்று பச்சை குத்துவது கௌரவ பாராளுமன்றத்திற்கும் அதன் செங்கோல் தர்மத்திற்கும் ஏற்புடையதல்ல.

சிங்கள தலைவர்களே! சிங்கள மக்களே! எங்கள் தேசத்தில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட இனமாக நாங்கள் இருந்து வருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளின் முன் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் யுத்தத்திற்கான அடிப்படைக் காரணங்கள் இதுவரை களையப்படவில்லை. அவை அனைத்தும் எரியும் பிரச்சனைகளாக இன்னும் எம்முன்னே எழுந்து நிற்கின்றன.

அவை பற்றி பேச முனைகிற போதெல்லாம் எங்கள் குரல்வளைகள் மாத்திரமல்ல எம் இனத்தின் குரல்வளைகளே இறுக நெரிக்கப்படுகின்றன. எங்கள் மக்களுடைய கைகள் கட்டப்பட்டு, உணர்வுகள் ஒடுக்கப்பட்டு, வாய்மொழிகள் முடக்கப்பட நீதிமன்றத் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. எமது சமூகத்தின் எல்லாச் செயல்களும் பயங்கரவாதம் என பட்டியலிடப்படுகிறது. அத்தகைய கொடூர அடக்குமுறைச் சூழலுக்குள் இருந்து வந்தே இவ்வுரையை நான் நிகழ்த்துகிறேன்.

மாவீரர்கள் உருவாகிய பின்னணி என்ன என்பதையும், மாவீரர்களின் தியாகத்தின் பின்னணி என்ன என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியது வரலாற்றின் கடமை என எண்ணுகிறேன். சுதந்திர இலங்கையில் என்ன நிகழ்ந்தது? 1957 இலும், 1965 இலும் இலங்கையில் இனச் சமத்துவத்தை அங்கீகரிக்க அடிப்படையாக அமைந்த பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், டட்லி – செல்வா ஒப்பந்தத்தையும் நீங்கள் தான் கிழித்தெறிந்தீர்கள்.

பன்மைத்துவமற்ற அரசியலமைப்பை உருவாக்கினீர்கள், பௌத்தத்தை மட்டும் முதன்மை பெற வைத்தீர்கள், தரப்படுத்தலை மேற்கொண்டீர்கள், தமிழ்மொழியை புறக்கணித்தீர்கள், தமிழர் தாயகத்தில் கூட்டு வாழ்வைச் சிதைத்து குடியேற்றங்களை உருவாக்கினீர்கள், இனவாதிகளை உருவாக்கி எம்மின மக்களை வெட்டிச் சரித்தீர்கள், சொத்துக்களை அழித்து, தீயிட்டுக் கொழுத்தினீர்கள், தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிங்கள ‘ஸ்ரீ’ ஐ கொதிக்கும் தாரால் குறிவைத்தீர்கள், பச்சிளம் குழந்தைகளை கொதித்த தார்ச்சட்டிகளுள் வீசி எறிந்தீர்கள், தமிழ் இளைஞர்களின் கண்களை உயிரோடு தோண்டி எடுத்தீர்கள். நினைத்துப் பாருங்கள், மாவீரர்களை உருவாக்கிய வரலாற்றின் பொறுப்பு யாரிடம் இருக்கிறது என்பதை!

இந்த அவலம் மிகுந்த வரலாற்றால் வெஞ்சினம் கொண்ட இளைஞர்கள் வெகுண்டெழுந்து எமது வரலாற்றைப் படைத்தார்கள். அவர்களையே நாங்கள் மாவீரர்கள் என மனங்களில் வைத்துப் பூசிக்கிறோம்.

அடக்கப்படுகிற போது விடுதலை பெற வேண்டுமென்ற உணர்வு மனித சமூகத்தின் தன்னியல்பான குணாம்சம். அதனையே மாவீரர்கள் செய்தார்கள். அவர்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்களல்ல. ஆயுதங்களை அவர்கள் விரும்பி ஏற்றவர்களும் அல்ல. தங்களையும், தங்கள் இனத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக போராடி அதற்காகவே தங்கள் உயிர்களை ஈர்ந்ததற்கு யார் பொறுப்பு?

அன்பான சிங்கள சகோதரர்களே! இன்றும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். வரலாற்றின் கறை படிந்த அத்தியாயங்களிலிருந்து விடுபட்டு, நல்லெண்ணங்களின் அடிப்படையில் நலம்பெறும் நாட்டை உருவாக்க வேண்டிய வரலாற்றுத் தருணத்தில் கண்ணீர் விட்டு அழவும் தடையுத்தரவு தருகின்றீர்கள்.

ஒவ்வொரு அப்பாவித் தாய், தந்தையின் நெஞ்சிலும் ஆணியால் அடிக்கிறீர்கள், தங்கள் தாய், தந்தையரின் கல்லறைகள் இல்லாது போன காலத்திலும், அவர்கள் புதையுண்ட நிலங்களை முத்தமிடத் துடிக்கின்ற பிள்ளைகளின் தலையிலே சம்மட்டியால் அடிக்கின்றீர்கள். அவர்களை நினைந்து அழுவதும், தொழுவதும் பயங்கரவாதம் என பறைசாற்றுகிறீர்கள்.

இலங்கை தேசத்தில் வாழ்கின்ற சிங்கள தேசிய இனம் போலவே நாமும் ஓர் தேசிய இனமாக எமக்கென்றோர் தனித்துவமான வரலாற்றுடன் கூடிய பண்பாட்டு, விழுமியங்களோடு இந்த வரலாற்றுத் துயர்களை எல்லாம் மறந்து வாழ முற்படும் வேளையில் சர்வதேச மனித உரிமை சாசனங்களை மீறி, இலங்கையின் உள்நாட்டு அடிப்படை உரிமைகளுக்கு முரணாக, ஜெனீவாவின் 30-1 தீர்மானத்தை முற்றாக நிராகரித்து, சர்வதேச சமவாயங்களின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட அங்கீகரிக்கத் தவறி, எமது சமூக, பண்பாட்டு, விழுமியங்களை நிராகரித்து ‘பௌத்த புராண, இதிகாச சிந்தனைகளிலிருந்து சிங்களதேசம் மீண்டு வந்து தமிழ்மக்களுக்கு சமத்துவமான தீர்வொன்றை தருமென்று

நான் துளியேனும் நம்பவில்லை’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனையை மெய்ப்பிப்பதாகவே உங்கள் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இந்த வரரலாற்று முரண்பாடுகளைத் தீர்த்து, தர்மத்தின் வழி நின்று, ஓர் சத்திய இலட்சியத்திற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை அவர்களுக்கான நாளில் நாம் வழிபாடு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டுமென வலியுறுத்தி, ‘விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம், நெருப்பு நதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம், அது தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம்’ என்ற தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து, விடுதலை வேள்விக்கு தமது இன்னுயிர்களை தியாகித்து, சருகாக மிதிபட்ட தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்த தேசிய எழுச்சிக்கு மூச்சாகி நின்ற எம் மாவீரச்செல்வங்களை என் நெஞ்சிருத்தி அஞ்சலித்து நிறைவு செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.