மாவீரர்களாகிய ஈழத்தமிழர்கள் -இளந்தீரன்.

464 0

மாவீரர்கள் என்பவர்கள் சுயநலன்களுக்காக இறந்தவர்கள் அல்ல. சக மனிதர்களுக்கான நல்வாழ்வுக்காக தமது உயிரை கொடுத்தவர்கள். மாவீரர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். இவ்வாறு மாவீரர் என்பவர்கள் உலகெங்கும் பல்வேறு இன, மொழி, மக்களிடையேயும் உள்ளார்கள். இந்த மாவீரர்களின் தொடக்கம் இன்று நேற்று அல்ல எப்போது மனிதன் மனிதனை அடக்கியாழும் எண்ணம் தோன்றியதோ அன்றிலிருந்து மாவீரர்களும் உலகில் விதையாகத் தொடங்கிவிட்டார்கள். இவ்வாறு அடக்குமுறைக்கு எதிராக உருவான மாவீரர்களளும் எமக்கானவர்கள்தான்.

சுதந்திர அரசாக இருந்த ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய காலனித்துவங்களால் அடக்கியாளப்பட்டார்கள். அக்காலப்பகுதியிலும் ஈழத்தழிழர்கள் பலர் மாவீரர்களாகியுள்ளார்கள். இலங்கைத்தீவை இறுதியாக ஆண்ட பிரித்தானியர் இலங்கைத்தீவை விட்டு வெளியேறும்போது தனித்தனியே சுதந்திர இராச்சியங்களாக இருந்த இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த ஆட்சியை சிங்கள மக்களிடம் கொடுத்துச்செல்ல சிங்கள பௌத்த அரசு ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கத்தொடங்கியது. அதோடு நிக்காமல் உரிமைகளும் ஒவ்வொன்றாகப்பறிபோனது.

தமிழீழத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசியல் ரீதியாக உள்வாங்கி உலக அரசியல் மாற்றங்களை அறிந்து தனித்தமிழீழம் தான் எமக்கான தீர்வு என சிந்தித்த ஈழத்தமிழர்கள் போராளிகளாக உருவாகி உரிமைப்போராட்டத்தை தொடர்ந்தார்கள். இங்கு தமிழீழம் என்பது பரந்த பார்வையுடைய சமூக மண் விடுதலை, பெண், சமத்துவம், ஏற்றத்தாழ்வில்லாத சாதியமற்ற சம வாழ்வியல், பிச்சைக்காரர்கள் அற்ற தேசமாக, உலக நிறுவனங்களுக்கு தேவையான வேலையாட்களை உற்பத்திசெய்யாமல், எமது மண்ணுக்கான கலை, விவசாயம், மீன்பிடி மற்றும் மண் சார்ந்த தொழில் வல்லுனர்களை உருவாக்கி அவர்களை எமது சமூகத்தின் முன்னுதாரணமாக வைத்து எமக்கான மொழி, எமக்கான திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் எது என்பதை எமது மண்ணின் இயல்புசார்ந்து மேற்கொள்ளவைத்து முக்கியமாக எமது சந்ததிக்கான பெயர்கள் தமிழில் இருக்கவேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தி இவற்றை விட மிக முக்கியமாக எம்மை நோக்கிவரும் விளம்பர கலாச்சாரம் எது என்ற புரிதலை நன்கு விளங்கிக்கொண்ட ஒரு சமூகக்கூட்டத்தை போராளிகள் உருவாக்கினார்கள். இந்த அரசியல் வடிவத்திற்கு சாட்சியமானவர்கள் எம்மக்கள் மட்டுமே.

தமிழீழம் என்னும் இலக்கை தனியே மாவீரர்கள் மட்டும் சுமக்கவில்லை. இந்த மாவீரர்களுடன் ஒன்றாக வாழ்ந்த போராளிகளும் மக்களும் சேர்ந்துதான் சுமந்தார்கள். ஏன் இவ்வாறு ஒன்றாக சேர்ந்து சுமந்த தமிழீழ வாழ்க்கையை கைவிட்டு தனியே பணம் ஈட்டும் நவதாராளவாத ஓடுதளத்தில் ஓடத்தொடங்கினோம்? ஏன் எம்மால் அந்த தமிழீழ வாழ்வியலை வாழமுடியவில்லை. இந்த நிலையில் இருந்து விடுபட்டு சரியான புரிதலை அடைய இந்த உலக ஒழுங்கை புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். இந்த உலகத்தை புரிந்து கொள்வதற்கு நாம் இந்த நவதாராளமயமாக்கல் சிக்கலில் இருந்து வெளிவரவேண்டும். அதற்கு சில விடயங்களை புரிந்து கொள்ளவேண்டும். நவதாராளமயமாக்கலின் முக்கிய அம்சமே கூட்டு முயற்ச்சியை உடைத்து மக்களை தனிநபர்களாக மாற்றுவதே. அப்போது தான் உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே நன்மை கொடுக்கும் நவதாராளவாத பொருளாதாரத்தில் உலக மக்களும் ஒரு பண்டமாக கையாளப்படுவது இலகுவாக இருக்கும். இதற்க்காக இல்லாத ஒன்றைத்திரும்பத்திரும்ப சினிமா, தொலைக்காட்ச்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்கள் ஊடாக நினைக்கவைத்து, நான் எனக்கு என்ற சிந்தனையை வளர்க்கிறது. இந்தப்புள்ளியில் எமக்கான எங்களுடைய என்ற அனைத்தும் தொலைந்து தனியே சில முதலாளிகளுக்கான உழைக்கும் வர்க்கமாக மாறிவிட்டோம்.

வெறுமனே மாவீரர்நாட்களில் அவர்கள் தியாகங்களை சொல்வதிலும் அந்த மாவீரர்களுடன் நானும் நின்றேன் அவர் என்னுடன் தான் நின்றவர் அல்லது அவரை எனக்கு தெரியும் என்று சொல்வதோடு நாம் கடந்து போய்விடுகின்றோம். எமது போராட்டம் தந்துவிட்டுபோன மாவீரர்கள் தனியே யுத்தவீரர்கள் மட்டுமல்ல அவர்கள் எமக்கான உரிமைக்காக போராடியவர்கள். அதற்கான பயணத்தில் ஏற்பட்ட தடைகளையும் அடக்குமுறைகளையும் அகற்றுவதற்காக போர்க்களத்தில் சமரசமின்றி விதையாகிப்போனவர்கள். இவ்வாறு உருவான மாவீரர்களை நாம் நினைவு கூறுகின்றோம். இது ஒரு சடங்கு அல்ல மாறாக எம்மை உணரும் நாள்.

மக்களைக்குழப்பி அவர்களின் கொள்கைக்கு எதிராக வாழவைத்துவிட்டாலே போதும் எல்லாம் அழிந்துவிடும் என்ற உலகமயமாக்கல் தத்துவத்துக்கு எதிராக ஆகக்குறைந்தது மாவீரர்களுடன் தோள்கொடுத்துநின்ற நாங்கள் அவர்கள் நினைத்த தமிழீழ வாழ்வியலை வாழவேண்டும். அப்போது தான் இந்த மாவீரச்செல்வங்களைத்தந்த தாய்மையின் அர்ப்பணிப்பு அர்த்தமுள்ளதாகவும் போராட்டகளத்தில் மாவீரர்களுடன் நின்ற மரணத்தைவிடகொடிய விழுப்புண் அடைந்தவர்களுக்கும் அந்த இழப்பையும் வலியையும் தாங்கும் சக்தியாக இருக்கும் என்பது உறுதி.

இளந்தீரன் .