கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது.
இதனால், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றியோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவர்களில், வயோதிபரின் மருமகன் உறவுமுறையான ஒருவருக்கும் வயோதிபருடன் ஒயில் கடையில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படும் மேல் மாகாணத்துக்குச் சென்று குடிதண்ணீர் போத்தல்களை எடுத்துவந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குடிதண்ணீர் போத்தல்களை மேல் மாகாணத்திலிருந்து எடுத்துவந்து கிளிநொச்சியில் விநியோகிக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் மூவர், குறித்த வயோதிபர் பணியாற்றும் ஒயில் கடைக்கு அருகில் கடை வைத்திருந்துள்ளனர்.
அவர்கள், மேல் மாகாணத்துக்குச் சென்றிருந்த நிலையில் நேற்று மீள அழைக்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் அவர்கள் மூவருக்கு கொரோானா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் சிப்பாய்கள் ஏழு பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.