முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்துவதற்கு 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.
இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பதின்நான்கு பேர் கொண்ட குழுவினரால் கடந்த 23ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உட்பட்ட சட்டவாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்படடவர்கள் சார்பாக மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கேட்ட நீதிபதி வழக்கின் கட்டளையை வழங்க வழக்கினை இன்றைய திகதிக்கு தவணையிட்டனர்.
இதன்படி, இன்றைய விவாதத்தின் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தடையை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.