துபாய் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட படகில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாய் சுங்கத்துறை சோதனை பிரிவு செயல் இயக்குனர் அப்துல்லா புஸ்னாத் கூறியதாவது:-
துபாய் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த படகில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் ஆளில்லாத குட்டி விமானம் மூலம் படகை கண்காணித்தனர். இதில் படகில் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அதிகாரிகள் மோப்ப நாய்கள் உதவியுடன் அதிரடியாக படகில் நுழைந்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது படகில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஹெராயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை கண்டுபிடித்தனர். இதில் மொத்தம் 662 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துபாய் சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு துபாய் துறைமுகங்களின் தலைவர் சுல்தான் பின் சுலையம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.