பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான் கான் ஒப்புதல்

333 0

பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மைநீக்க தண்டனை வழங்குவது தொடர்பாக கொள்கை அடிப்படையில் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
இந்நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறி உள்ளார்.