இலங்கையில் நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது பொது வைத்தியசாலைகளில் 34 பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரங்களும் 1200 வென்டிலேட்டர் இயந்திரங்களும் 7004 ஐ.சி.யு. படுக்கைகளும் காணப்படுகின்றன.
கொரோனா தொற்று இலங்கையில் பரவ ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, 25 பி.சி.ஆர். இயந்திரங்களும் 220 நடமாடும் வெட்டிலேட்டர் இயந்திரங்களும் 61 ஐ.சி.யு. படுக்கைகளையும் மேலதிகமாக பொது வைத்தியசாலைகளில் இணைத்துள்ளோம்.
பி.சி.ஆர் பரிசோதனைக்காக 25 மத்திய நிலையங்கள் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்காலத்தில் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக உலக வங்கியிடமிருந்து நிதி பெற்று, பி.சி.ஆர். இயந்திரங்களை கொள்வனவு செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
11 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் தற்போது ஒரு நாளைக்கு பொது வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
மார்ச் மாதம்வரை ஒருநாளைக்கு 300 பி.சி.ஆர். பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 11 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் போதிய தெளிவுடன் காணப்படுகிறது. இதற்காக ரொபோ கைகள் கொண்ட 16 இயந்திரங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம்.
2020 ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3 ஆம் திகதிவரை இலங்கையில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை.
இந்தக் காலப்பகுதியில் பி.சி.ஆர். பரிசோதனைகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுதான் வந்தன. எனினும் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊடாக தற்போது தொற்று ஏற்பட்டுள்ளது.
இங்கு அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளருக்கு எவ்வாறு வைரஸ் பரவியது என்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தற்போது குற்றத்தடுப்புப் பிரிவினால் விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.