மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்காலுக்கு வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-புதுவையில் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மாறாக தேர்தலில் வெற்றி பெறாத ஒரு தலைவரை முதல்அமைச்சராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தி இருக்கின்றது. எனவே எப்பொழுது வேண்டுமானாலும் புதுவை மாநிலத்திற்கு இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
புதுவையில் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்று சொன்னால் மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திரமோடியினுடைய திட்டங்களை புதுவை மாநிலத்திற்கு அதிகமாக கொண்டு சேர்க்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆளுமை நிறைந்த ஒரு அரசாங்கம் புதுவைக்கு வர வேண்டும். அது நிகழ்வதற்கான வாய்ப்பும் பெருகி வருகிறது.
சட்டம்ஒழுங்கை பொறுத்தவரை அது அந்தந்த மாநிலங்களின் கையில்தான் உள்ளன. ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பயணம் இதுபோன்ற இடங்களில் மட்டும் ரெயில்வே துறையின் கவனம் கொடுக்கப்படுகிறது. அவர்களது எல்லைக்கு அப்பாற்பட்டு அவர்களால் செயல்பட முடியாது. இது எல்லோருக்கும் நன்றாக தெரியும். சட்டம்ஒழுங்கை பொறுத்தவரை மாநில அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ரெயில்வே பகுதிக்கு உள்ளே தவறுகள் நடைபெறாத வகையில் ரெயில்வே துறை செயல்படும்.
பிரதமர் நரேந்திரமோடி எந்த கட்சியின் ஆட்சி, எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், அனைத்து மாநில மக்களுக்கும் செய்ய வேண்டியது நமது கடமை, எனது இந்திய நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டியது எனது கடமை என்று எல்லா திட்டங்களையும் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வழங்கி வருகிறார்.
பிரதமர் எல்லா விஷயங்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுப்பார். சில விஷயங்களுக்கு சிறப்பம்சங்கள் புதுவை மாநிலத்திற்கு உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் பிரதமர்தான் தரவேண்டும் என்று சொன்னால் எந்தளவிற்கு சாத்தியம் என்பது குறித்து மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
புதுவை மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஏராளமான நிதிகள் கிடைக்காமல் இருந்து வருகிறது. புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மாநில பா.ஜனதா கட்சி சார்பில் தீர்மானமே போடப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது குறித்து நான் பலதடவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜூடன் பேசி உள்ளேன். பிரதமர் நரேந்திரமோடி மீனவர்களின் கவலைகளை நேரடியாக தெரிந்து கொண்டிருக்கிறார். மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.