‘ஜெ.ஜெயலலிதா ஆகிய நான்…’ என்ற கர்ஜனைக் குரலில் கோடான கோடி தமிழர்களை கட்டிப்போட்டதுடன் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த சிம்மக்குரல் இன்று ஓய்ந்தது.
‘உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்..’ என்ற தாரக மந்திரத்தை மெய்யாக்கும் வகையில் மக்கள் பணியாற்றிவந்த மான்புமிகு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சுகயீனம் காரணமாக இறந்துவிட்டார் என்ற செய்தி உலகத் தமிழர்களை வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது.
2011 இல் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் வாழ்வுரிமைப் பிரச்சினைகளுக்காக சமரசமின்றி போராடிவந்த ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையிலும் உறுதியான நிலைப்பாடெடுத்து செயற்பட்டு வந்திருந்தார்.
சுதந்திர தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை, அது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படும் வரை இலங்கை நாட்டை எதிரி நாடாக அறிவித்து இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும், பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என உளப்பூர்வமான நிலையெடுத்து எமது நீதிக்கான போராட்டத்தில் துணைநின்று வலுச்சேர்த்திருந்தார் ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
எமது நீதிக்கான போராட்டத்தில் இறுதிவரை உடனிருந்து பலம்சேர்ப்பார் என்று நாம் நம்பியிருந்த வேளையில் கடுமையான சுகவீனம் காரணமாக இன்று எம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டார் என்பதை நினைக்கையில் மீளாத்துயர் ஆட்கொள்கின்றது.
தமிழக அரசியல் வரலாற்றில் என்றென்றும் மங்காப் புகழோடு இரண்டறக் கலந்துவிட்ட மான்புமிகு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களது மறைவால் துயருற்றிருக்கும் கோடான கோடி தமிழ் மக்களுக்கும் கட்சித்தொண்டர்களுக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இரும்புப் பெண்மணி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு குறியீடு இணையத்தளம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது மறைவால் துயருற்றிருக்கும் தமிழக மக்களுக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
«தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்»
ஆசிரியர்.
குறியீடு இணையம்.