வெளியுறவுத் துறை உள்பட புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

350 0

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், வெளியுறவுத் துறை உள்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்தார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவி ஏற்கிறார்.
இதற்கிடையே, ஜோ பைடன் தனது தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஜோ பைடன் வெளியுறவுத் துறை உள்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்கள் பெயர்ப்பட்டியலை இன்று அறிவித்தார்.
அதன்படி, ஆன்டனி பிளின்கென் வெளியுறவுத் துறை மந்திரியாகவும், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ஜாக் சல்லிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  முன்னாள் அமெரிக்க தலைமை தூதர் ஜான் கெர்ரியை ஜோ பைடனின் சிறப்பு  தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்புத் துறை மந்திரியாக அலெஜான்ட்ரோ மயோர்காஸ் நியமித்துள்ளார். முன்னாள் துணை சிஐஏ இயக்குநரான அவ்ரில் ஹைன்ஸ் தேசிய புலனாய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை உறுப்பினர் அந்தஸ்துடன், லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் ஐக்கிய நாடுகள் சபையில் தனது தூதராக பணியாற்ற பரிந்துரைக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.