லலித் மற்றும் குகன் கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அளித்த அழைப்பாணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வலுவிழக்கச் செய்து ரீட் கட்டளை ஒன்றை வெளியிட்டது.
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011ம் ஆண்டிலிருந்து காணாமல் போயுள்ளதோடு, இது தொடர்பில் அவர்களைத் தேடித் தருமாறு அவர்களது குடும்பத்தினரால் ஹபெயாஸ் கோபூஸ் முறைப்பாட்டை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், பாதுகாப்புக் காரணங்களினால் யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுவது சிரமமானது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என விடுக்கப்பட்ட உத்தரவினை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வருடம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
குறித்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் யாழ் நீதவான் நீதிமன்றினால் வெளியிடப்பட்ட அழைப்பாணையை வலுவிழக்கச் செய்து ரீட் கட்டளை ஒன்றை வெளியிட்டது.