சேலத்தில் ரூ.1 லட்சம் கடனுக்காக விற்கப்பட்ட குழந்தை மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பகுதியை சேர்ந்தவர் சவுகத்அலி (வயது 32). தொழிலாளி. இவர்களுக்கு ஏற்கனேவ ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மீண்டும் 2-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு சவுகத் அலியின் வீட்டிற்கு மாமானார் மற்றும் உறவினர்கள் வந்தனர். அப்போது 2-வது பிறந்த குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தை குறித்து சவுகத் அலியிடம் கேட்ட போது குழந்தை இறந்து விட்டதாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தாதகாப்பட்டியை சேர்ந்த சேட்டு என்பவரிடம் சவுகத் அலி ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்தார்.
கொடுத்த கடன் ஒரு லட்சத்தை திருப்பி தருமாறு சேட்டு தொந்தரவு செய்து வந்தார். பணத்தை கொடுக்க முடியாமல் சவுகத் அலி கஷ்டப்பட்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் குழந்தை இல்லாமல் கஷ்டப்படுகிறார். அவருக்கு குழந்தையை விற்று விடலாம் என புரோக்கர் ஒருவர் கூறினார்.
இதையடுத்து அந்த புரோக்கர் மூலம் குழந்தையை விற்க முடிவு செய்தார். தனது கடன் பிரச்சினையால் 6 மாத குழந்தையை ரூ. 1 லட்சத்திற்கு சுந்தரத்திடம் விற்பனை செய்தார். அந்த தொகையை வாங்கிய சவுகத் அலி, சேட்டுவிடம் வாங்கிய கடனை அடைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் ஒரு லட்சத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை மீட்ட போலீசார் சவுகத் அலியின் மனைவியிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து சவுகத்அலி, சேட்டு, சுந்தரம் ஆகிய 3 பேரையும் பிடித்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. அதற்கான முடிவு வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.