ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.“தாஜுடீன் 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார். தற்போது அது கொலை என கூறுகின்றார்கள். இவ்வளவு காலம் சாட்சிகளுக்கு என்ன நடந்தது? வைத்திய அறிக்கைகளுக்கு என்ன நடந்தது? இதனை யார் மறைத்தது? உடற்பாகங்கள் எவ்வாறு காணாமல் போனது?
சில காலங்களுக்கு முன்னர் நாமல் ராஜபக்ச வாகனத்தில் செல்லும் போது சிங்கள ஊடகம் ஒன்றுக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தார். இதன் போது அந்த ஊடகத்தின் ஊடகவியலாளர் “நாமல் ராஜபக்ச அவர்களே தங்களுக்கு தாஜுடீனை தெரியுமா?” என வினவினார்.
“ஆம் அவர் எங்கள் சிறந்த நண்பர், நாங்கள் ஒன்றாக குடித்து ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக இருப்பவர்கள். நாங்கள் அவர்களின் துன்பங்களில் பகிர்ந்துக் கொள்வோம். அவர் எங்கள் துன்பத்தில் பகிர்ந்துக் கொள்வார். நாங்கள் ஒன்றாக ரகர் விளையாடுவோம். நிகழ்வில் போது ஒன்றாக இணைந்துக் கொள்ளும் சிறந்த நண்பர்கள்…” என நாமல் கூறினார்.
இதன்போது நீங்கள் சிறந்த நண்பர்களா? என ஊடகவியலாளர் வினவினார். ஆம்… நாங்கள் சிறந்த நண்பர்கள் என நாமல் பதிலளித்தார். அப்படி என்றால் ஏன் மரண சடங்கில் கலந்துக்கொள்ள வில்லை என அவர் நாமலிடம் வினவினார்.
பொதுவாக நண்பர் ஒருவர் உயிரிழந்தால் நண்பர்கள் என்ற ரீதியில் செல்வோம். மூன்று நாட்கள் தூங்காமல் விழித்திருப்போம். அவர்களின் பெற்றோரிடம் பேசுவோம். எனினும் இந்த ராஜபக்ச குமாரர்கள் மூவரும் தாஜுடீனை அடித்து கொலை செய்யப்பட்டதன் பின்னர் அந்த வீட்டு பக்கமே செல்லவில்லை. தொலைப்பேசி அழைப்பொன்றையேனும் மேற்கொள்ளவில்லை.
ஏன் ஒருவரும் செல்லவில்லை? என்ன காரணம்? இதன் பின்னணில் ஒரு காதல் கதையே உள்ளது. யாசார பற்றி ஒன்றை கூறினார் என தாஜுடீனை கொலை செய்யப்பட்டார். இவர் நல்ல வலுவான உடல் நிலையை கொண்ட திறமையான ரகர் வீரராகும். அவர் எப்படி காருக்குள் சென்று தீ வைத்துக் கொள்ள முடியும். என்ன காரணம்? இதை பற்றி கூறினால் சிலர் கோபமடைகின்றார்கள்.
எனினும் தாஜுடீனின் அம்மா, அப்பா குறித்து சிந்திக்க வேண்டும். அவ்வாறு அடித்து உடைத்து உடற்பாகங்களுக்கு தீ வைத்து வாகனத்தினுள் போடப்பட்டுள்ளது. தனது நண்பர் குறித்து தற்போது நான் கூறும் போது நாமல் சிரிக்கின்றார். அவருக்கு நண்பரின் மரணம் நகைச்சுவையாக உள்ளது. இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த ஒரு வருடத்தில் இது கொலை என கண்டுபிடித்து விட்டது. கொலை செய்தவர்கள் விரைவில் சிக்குவார்கள்.
தற்போது ராஜபக்சவின் மனைவிக்கு தொடர்புடைய டிபென்டர் வாகனத்திலேயே தாஜுடீன் கடத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.இந்த சந்தரப்பத்தில் வசீம் தாஜுடீன் குறித்து பேசும் போது நாமல் தரப்பினருக்கு கோபம் வருவது ஏன் என எனக்கு தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.