வீடுகளிற்கு முன்பாக ஒளி தீபம் ஏற்றி, சிவப்பு மஞ்சள் கொடிகளை காட்சிப்படுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்குமாறு முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவீரர் தினத்தினை நடாத்துவதில் ஏற்ப்படுத்தப்படும் தடைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் விதத்தில் பேரினவாத அரசு, நீதிமன்றத்தின் ஊடாகவும் படையினர் ஊடாகவும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இதன்மூலம் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதை சட்டரீதியாக தடுக்கும் கீழ்த்தரமான நாடாக இலங்கை வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
நினைவேந்தல் நிகழ்விற்கு சுகாதார நடைமுறைகளை காரணம் காட்டும் இந்த அரச, வைரஸ் தாக்கம் அதிகரித்திருந்தபோது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தில் போர் வெற்றி விழாவை கடந்த மே மாதம் கொண்டாடியது. இதுதான் இலங்கையின் நீதியா?
நாட்டில் எந்த அபிவிருத்தியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாத பேரினவாத அரசுகள், தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மாத்திரம் மூலதனமாக வைத்து அரசியல் இலாபடைமடைந்து வருகின்றது.
இதனை பேரினவாதிகள் உணராத வரையில் இந்த நாடு முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புகள் துளிஅளவேனும் இல்லை.
எத்தகைய அடக்குமுறையையும் தகர்த்து நினைவேந்தல் உரிமையை அனுஸ்டிக்கும் கடப்பாடும்,பொறுப்பும் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் காணப்படுகின்றது.
எனவே, இம்முறை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை வீரகாவியமடைந்தவர்களின் பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும் மாத்திரம் அஞ்சலிப்பதை தவிர்த்து, இலங்கையின் வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த ஒட்டுமொத்த தமிழ்மக்களும், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களும், இளைஞர்களும் பேரெழுச்சியுடன் அனுஸ்டிக்க வேண்டிய தார்மீக பொறுப்பையும்,கடமையையும் கொண்டுள்ளனர்.
இதனூடாக தமிழர்களின் தீராத தாகமாகவுள்ள இன விடுதலைபற்றியும், விடுதலைப்போராட்டம் பற்றியும் எதிர்கால சந்ததிகள் அறியும் நிலையை ஏற்படுத்த முடியும்.
எனவே, எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை, அனைத்து தமிழ் மக்களின் வீடுகளிற்கு முன்பாக ஒளிதீபம் ஏற்றி, சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளை காட்சிப்படுத்தி விடுதலைப்போரின் வீர மறவர்களிற்கு, அஞ்சலியினை செலுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.