இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் டிசம்பர் 2-ந் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.
அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவிய வைரஸ் தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, மார்ச் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் இங்கிலாந்தில் கொரோனாவின் 2-ம் அலை பரவத் தொடங்கியது. இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்கு மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார்.
நவம்பர் 5-ந் தேதி முதல் டிசம்பர் 2-ந் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், தேவை ஏற்பட்டால் மீண்டும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் டிசம்பர் 2-ந் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
அதே நேரத்தில் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.