அண்மையில் மட்டக்களப்பில் மத ரீதியாக தேரர்கள் பதற்ற நிலையை உருவாக்கிய நிலையில் அங்கு தமிழ் மக்களிடையே தற்போதும் பதற்றமான சூழ்நிலையே நிலவுகின்றது.
இதனையடுத்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மதத் தலைவர்களுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டபோதிலும், இன்று ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பொதுபல சேனாக் கட்சியின் செயலர் ஞானசார தேரர் மற்றும் அதிகளவான சிங்கள மக்கள் மட்டக்களப்புக்குள் பிரவேசிக்க முயற்சித்த வேளையில் காவல்துறையினரால் இடையில் மறித்து திருப்பி அனுப்பப்பட்டார்.
மட்டக்களப்பு விகாராதிபதியைச் சந்திக்கவே தான் அங்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால். இதற்கு முன்னர் மட்டக்களப்பு விகாராதிபதி ஒரு அரச உத்தியோகத்தரை தரக்குறைவாக பேசியதுடன், தனியார் ஒருவரின் காணியில் அடாத்தாக புத்தர் சிலையை வைத்து மடக்களப்பில் குழப்பத்தை உருவாக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.