துறைமுகங்களில் முன்னெச்சரிக்கையாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

331 0

எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) புயலாக வலுப்பெற இருக்கிறது.

இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 25-ந் தேதி (நாளை மறுதினம்) பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

24-ந் தேதி (நாளை) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

25-ந் தேதி (நாளை மறுதினம்) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதியில் 23-ந் தேதி (இன்று) மணிக்கு 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 110 கிலோமீட்டர் வரையிலான வேகத்திலும் காற்று வீசக்கூடும். அதேபோல் தென்மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் 24, 25-ந் தேதிகளில் (நாளையும், நாளை மறுதினமும்) சூறாவளி காற்று மணிக்கு 75 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் வீசும். இதன் காரணமாக மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்திலும் முன்னெச்சரிக்கையாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், நாகை, சீர்காழி, புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.