ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவினர் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் மூலம் ரணில் விக்ரமசிங்கவே நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என விரும்புவதாக அக்கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை அன்று சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த விவகாரம் குறித்து கட்சி விவாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் வீழ்ச்சியடைந்துள்ள கட்சியை மீட்டெடுப்பதற்குரிய நேரம் வந்துவிட்டதால் நாங்கள் நாடு முழுவதும் பயணம் செய்து, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை வரவுசெலவுத் திட்டத்தில் சில பாராட்டத்தக்க திட்டங்கள் இருந்தாலும், அந்தத் திட்டங்களை செயற்படுத்த அரசாங்கத்திற்கு போதுமான நிதி இல்லை என்றும் இதன் காரணமாக விவசாயத் துறையில் திட்டங்களை செயற்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படக்கூடிய, மீன்வளத் துறை மற்றும் ஆடைத் துறையில் கவனம் செலுத்துமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஒரு நெருக்கடியான நிலையில் நாட்டினை நிர்வகிக்க ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவரின் தலைமை நாட்டுக்கு அவசியம் என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.