சீனி விலை தொடர்பாக தகராறு – அதிகாரசபையின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வர்த்தகர்கள்

593 0

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை எதிர்க்கும் சீனி இறக்குமதியாளர்கள் தங்கள் கையிருப்புகளை பதுக்கிவைத்துக்கொண்டு பழைய விலைக்கு சீனியை விற்பனை செய்வதற்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இதன் விளைவாக சில்லறை வியாபாரிகள் பழைய விலைக்கே சீனியை விற்கிறார்கள். பாவனையாளர்கள் விவகார அதிகாரசபை இது விடயத்தில் இன்னமும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நவம்பர் 10 வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஒரு கிலோ வெள்ளைச்சீனி பக்கெட்டின் கூடுதல்பட்ச சில்லறை விலை 90 ரூபாவாகவும் பக்கெட்டில் அடைக்கப்படாத சீனியின் விலை 85 ரூபாவாகவும் அதேவேளை மொத்தவிற்பனை விலை 80 ரூபாவாகவும் இருக்கவேண்டும் என்று பாவனையார் விவகார அதிகாரசபை அறிவித்தது.

ஆனால், வர்த்தமானி அறிவித்தல் வெளியாகு முன்னரே தாங்கள் 90,000 மெட்ரிக் தொன் சீனியை இறக்குமதி செய்துவிட்டதாக கூறும் சீனி இறக்குமதியாளர்கள் புதிய விலைக்கு தங்களால் சீனியை விற்பனை செய்ய இயலாது என்று கூறுகிறார்கள்.

ஆனால், இன்னொரு 80,000 மெட்ரிக் தொன் சீனி பிறகு இறக்குமதி செய்யப்ட்டதாக தங்களக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறிய பாவனையாளர்கள் விவகார அதிகாரசபையின் பேச்சாளர் குறைக்கப்பட்ட விலைக்கே சீனி விற்பனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அடுத்தவாரம் சீனிகையிருப்புகளை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்றுகையை மேற்கொள்ள தாங்கள் நிர்ப்பந்க்கப்டுவதாகவும் அவர் சொன்னார்.

வர்த்தமானி அறிவிப்பின் மூலமாக விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் முடியாமல்போன தொடர்ச்சியான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு இதே போன்று வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் பாவனையாளர் அதிகார சபையினால் விலைகளை கட்டுப்படுத்த முடியாதிருப்பதன் விளைவாக சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

யால அறுவடையில் இருந்து பெறப்பட்ட 18 இலட்சம் தொன்கள் நெல் நாட்டில் இருக்கிறது. அதன மூலமாக 11 இலட்சம் தொன் அரிசியை பெறமுடியும் என்று விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. என். டபிள்யூ.வீரக்கோன் கூறினார்.

“சந்தைகளில் மாத்திரமே தட்டுப்பாடு நிலவுகிறது.ஆரிசி ஆலைக்காரர்களும் வியாபாரிகளுமே இதற்கு பொறப்பு” என்றும் வீரக்கோன் குற்றஞ்சாட்டினார்.