கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் புத்தகத்தின் 12-ம் பதிப்பு அறிமுக விழா டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறுகதைகளை ஆய்வு செய்து பேசினார். நிறைவாகக் கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகம் குறித்த வியப்பு தீராத வரைக்கும் வாழ்வு தீர்ந்து போவதில்லை. வாழ்வு தீராத வரைக்கும் இலக்கியம் முடிந்துபோவதில்லை. ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் எனக்கு எவ்வளவு பெரிய வியப்போ, புல்லின் நுனியில் தூங்கும் பனித்துளியும் அதே வியப்பை ஏற்படுத்துகிறது. விரிந்து செல்லும் வாழ்வு மனதையும் விரியவைக்கிறது. இந்தச் சிறுகதைகளெல்லாம் வாழ்வு குறித்த வியப்பும் திகைப்பும்தான்.
வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்க்க இரண்டு வழிகள்தான் உண்டு: ஒன்று எதிர்கொள்வது; அல்லது ஏற்றுக்கொள்வது. பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று வழிகாட்டுவதே நல்ல இலக்கியம்.ஒரு பத்திரிகை செய்தி கூடக் கதையாக முடியும். டெல்லியில் வாழ்கிற குரங்குகளையெல்லாம் வெளியேற்றச் சொல்லி டெல்லி உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அந்தச் செய்தியே என் கதைக்கு ஒரு கருப்பொருளானது.
“இந்த பூமியில் மனிதர்களுக்கு முன்னால் பிறந்தவர்கள் நாங்கள். ராமஜென்ம பூமியை விட்டுக்கொடுக்க மறுக்கிறவர்களே! ஆஞ்சநேய ஜென்ம பூமியை மட்டும் நாங்கள் விட்டுக்கொடுப்பது என்ன நியாயம்?” என்று குரங்குகள் கேட்பதாக எழுதியிருக்கிறேன். படைப்பாளிகளைக் கொண்டாடுகிற சமூகம்தான் நாகரிகமான சமூகம். என்னை விடச் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலையே கங்கைக்கரையில் தீட்டுப்பட்டு கிடக்கிறது. தமிழர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.
திருவள்ளுவர் ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானவர் அல்லர். அவர் ஒட்டுமொத்த மனித குலத்துக்கே உரிமையானவர். இந்தியாவின் அறிவு வளம் என்பது திருவள்ளுவரையும் சேர்த்தால்தான் பூரணமாகும். எனவே உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் அரசுகள் திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ ஆவன செய்ய வேண்டும்.” இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
விழாவில் தமிழ்ச் சங்கச் செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் கே.வி.கே.பெருமாள், அகில இந்தியத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புச் செயலாளர் முகுந்தன், புலவர் விஸ்வநாதன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட டெல்லி வாழ் தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.