நம்பிக்கையின் ஒளி தெரிகிறது – கொரோனா தடுப்பூசி குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் மகிழ்ச்சி

400 0

கொரோனா தடுப்பூசியின் சமீபத்திய முன்னேற்றங்களில் நம்பிக்கையின் ஒளி தெரிகிறது என ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரசை ஒழிப்பதற்கான தடுப்பூசி மனிதர்களிடம் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் திறன் வாய்ந்தது என அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் சமீபத்திய முன்னேற்றங்களில் நம்பிக்கையின் ஒளி தெரிகிறது என கூறி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்க ஜி 20 நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசிகளின் சமீபத்திய முன்னேற்றங்களில் நம்பிக்கையின் ஒளி தெரிகிறது. ஆனால் அந்த நம்பிக்கையின் ஒளி அனைவரையும் சென்றடைய வேண்டும். அதாவது தடுப்பூசிகள் உலகளாவிய பொது நன்மையாக கருதப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் அனைவரும் அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மக்களுக்கான தடுப்பூசிகள் வேண்டும்.
உலகெங்கிலும் புதிய கொரோனா தடுப்பூசிகள் மற்றும் கருவிகளை பெருமளவில் உற்பத்தி செய்தல், கொள்முதல் செய்தல் மற்றும் வழங்குவதற்கு நிதி முக்கியமானது. ஜி 20 நாடுகளில் அதற்கான வளங்கள் உள்ளன. எனவே கொரோனா தடுப்பு கருவிகள் உற்பத்தியை முழுமையாக ஆதரிக்க அவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.