தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது புதல்வியாக 1948 பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஜெயலலிதா பிறந்தார்.
ஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய பூர்வீகம் திருச்சி ஸ்ரீரங்கம்.
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூரு மகாராஜாவின் குடும்ப வைத்தியர்.
ஜெயலலிதாவுக்கு 1 வயதும் ஆறுமாதமும் ஆனபோது, தந்தை காலமானார்.
முதலில் பெங்களூரு பிஸப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பை தொடர்ந்தார்.
படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார்.
12வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது.
பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும் இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார்.
1964ஆம் ஆண்டில் மெட்ரிகுலேஸன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார்.
மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு திரை உலக பிரவேசம் நடந்தது.
ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார்.
ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.
ஆரம்பத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகியாக நடித்து 1965இல் வெளிவந்த ‘வெண்ணிற ஆடை’ தான் அவரது முதல் தமிழ்ப்படம்.
வெண்ணிற ஆடை படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த ‘எபிசில்’ (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார்.
அந்த படத்தை பார்த்தவர்கள் இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்! என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்கள்.
முதல் படத்திலேயே கதாநாயகி ஆகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார்.
ஏம்.ஜீ.ஆர், சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார்.
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971ஆம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு ‘வேதா நிலையம்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் ‘வேதா’)
ஜெயலலிதாவின் 100வது படமான ‘திருமாங்கல்யம்’ 1977இல் வெளிவந்தது.
அதன்பின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார்.
1980இல் வெளிவந்த ‘நதியைத்தேடி வந்த கடல்’ என்ற திரைப்படமே அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.
சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்துள்ளார்.