மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில், மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாவீரர் வாரமான இன்று 21ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில், தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கபடும்.
இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரி வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் பொலிஸார் மனுத்தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு வழங்கியுள்ளது. சில நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் மாவீரர் நினைவு வாரத்தின் ஆரம்ப நாளாகும். அதனை முன்னிட்டு, கப்டன் பண்டிதரின் திருவுருவ படத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
கம்பர் மலையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் பண்டிதரின் தாயாருடன் இணைந்து அஞ்சலி செலுத்தினர்
தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினரான வல்வெட்டித்துறை கம்பர் மலையை சேர்ந்த கப்டன் பண்டிதர் என அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்தார்.
மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பண்டிதரின் தாயாரான சின்னத்துரை மகேஸ்வரி தலையிட்டு, நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.