கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இராசபாதை வீதியில் இராணுவக் காவலரன் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நினைவேந்தல் நடத்தப்படும் இடத்தில் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு- கிழக்கில் இன்று, 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு முக்கிய இடங்களில் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் யாழ்ப்பாணம் நகர பிரிகெட் முகாம் அமைக்கப்பட்டுள்ளதால்,அதற்கு முன்பாக இராச பாதையிலுள்ள காணி ஒன்றில் கடந்த 4 வருடங்களாக மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டு வந்தது.
அந்த இடம், கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின் தலைமையில் துப்புரவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அங்கு நினைவேந்தலை நடத்த நீதிமன்றத் தடை உத்தரவு கோரப்பட்ட போதும், அந்த மனு, எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதனால் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இராச பாதை வீதியில் இராணுவக் காவலரண் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அமைக்கப்பட்டுள்ளது. படையினர் அந்தப் பகுதியில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் நினைவேந்தல் நடத்தப்படும் காணியைச் சுற்றி கோப்பாய் பொலிஸாரும் இன்று காலை முதல் பாதுகாப்புக் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.