மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் முடக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வழமைக்கு திரும்பும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் 24 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய செயற்பட்டு வருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
அந்த பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுபாட்டுக்கும் இவர்கள் கட்டுப்பட்டு செயற்பட்டு வருகின்றனர். தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் அந்த பகுதிகளையும் வழமைக்கு கொண்டுவரமுடியும்.
சமூக இடைவெளி பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் நேற்று மாத்திரம் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி முதல் இதுவரையில் 392 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இது தொடர்பான சுற்றுவளைப்புகள் இடம்பெற்று வருவதுடன், அனைவரும் இந்த ஒழுக்கவிதிகளை கடைப்பிடித்து செயற்பட வேண்டியது கட்டாயமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட வைத்தியர்கள் அடங்கிய நடமாடும் சேவை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் தொற்றாநோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளிட்ட நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த நாட்களில் பதிவான கொரோனா மரணங்களில் குறிப்பிடத்தக்க மரணங்கள், வீடுகளிலேயே பதிவாகியமை தொடர்பில் சுகாதார அமைச்சினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டிய இதனைக் கூறியுள்ளார்.