வரவு செலவுத் திட்டத்தில் சில நல்ல திட்டங்கள் இருந்தாலும் தற்போது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பான திட்டங்கள் குறித்த விளக்கம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தின் நிலைமையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்றும் இந்த சவால்களை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதைக் காட்ட தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.
பொருளாதார சிக்கல்களினால் பெருமளவான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு மூடப்படவுள்ளன, அத்தோடு பலர் வேலையை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சினையை எவ்வாறு கையாளப் போகிறது என்பது குறித்து அரசாங்கம் பேசவில்லை என ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளாந்த ஊதியத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவிலும் அரசாங்கம் சிரமத்தை எதிர்கொள்கிறது என குறிப்பிட்ட ருவான் விஜேவர்தன, இந்த திட்டத்தை தொடர முடியாவிட்டால் அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்துவதற்கான திட்டம் வரவேற்கத்தக்கது என தெரிவித்த ருவான் விஜேவர்தன, இருப்பினும், ஈ.பி.எஃப் கோருவதற்கான தகுதியான வயதை 60 ஆக நீடிக்கும்போது, அவர்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.