கொரோனா வைரஸ் தொற்றுடன் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தமது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண்ணை தேடுவதற்கு 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக, சுகாதார பிரிவினரும், ஏனைய பிரிவினரும் வெவ்வேறு இடங்களில் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி – எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 25 வயதான குறித்தப் பெண், நேற்று இரவு 9 மணி அளவில் தமது இரண்டரை வயதான குழந்தையுடன் ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். இன்று காலை எஹெலியகொட பிரதேசத்தில் குறித்த இரண்டரை வயதான குழந்தை மாத்திரம் மீட்கப்பட்டது.
தப்பிச் சென்றப் பெண்ணின் வீட்டிலேயே இந்த குழந்தை மீட்கப்பட்டது. இதன்போது அந்த வீட்டில் குறித்தப் பெண்ணின் கணவர், சகோதரர் மற்றும் இன்னும் சில குழந்தைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்தப் பெண் தமது சகோதரர் ஒருவரது வீட்டுக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதேநேரம் இந்தப் பெண் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.